“Do not be anxious about anything, but in every situation, by prayer and petition, with thanksgiving, present your requests to God.”
- Philippians 4:6
அன்புள்ள தந்தையே, இந்த மிரபெல்லா ஊழியத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரையும் சகோதரி கரோலின் அவர்களுடைய குடும்பத்தையும், உம்முடைய இரத்தத்தின் கோட்டைக்குள்ளாக வைத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டுகிறோம். இந்த ஊழியத்தைத் தொடர்பு கொள்பவர்கள்; தூய ஆவியால் நிரப்பப்பட்டு, கடவுளின் சமாதானம், அன்பு, பாதுகாப்பு, நோயற்ற வாழ்க்கையை சுதந்தரித்துக் கொள்ளட்டும். அவர்கள் ஆண்டவரிடத்தில் திரும்பும் ஆன்மாக்களாக மாற்றப்படட்டும். தாயே மரியே! எங்களுக்காக எல்லா நேரத்திலும் துணை நின்று; ஆன்ம பெலன் பெற்றுத் தருமாறும், எங்களைப் பெயர் சொல்லி அழைத்து, ஊழிய வாய்ப்பைத் தந்ததற்காகவும் நன்றி கூறுகின்றோம். ஆமென்!
அதிதூதரான புனித மிக்கேலே! யுத்த நாளில் எங்களைத் தற்காறும். பிசாசின் துஷ்டதனத்திலும், அதன் கண்ணிகளிள் இருந்தும் எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்துகொள்ளும்படி தாழ்மையாய் உம்மை மன்றாடுகிறோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கிற நீர்; ஆன்மாக்களை நாசம் செய்யும்படி உலகெங்கும் சுற்றித்திரியும் கெட்ட ஆவிகளையும், பிசாசுகளையும்; தேவ வல்லமையைக் கொண்டு நரக பாதாளத்தில் தள்ளிவிடும். ஆமென்!
எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் வானத்தூதரே, இறைவனின் கருனையால் உம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான ஒளியைத்தந்து, என்னை எல்லாத்தீமைகளிலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும் - ஆமென்!
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருட்சுடரை எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருளுவீர். நன்கொடை வள்ளலே வந்தருளுவீர். இதய ஒளியே, வந்தருளுவீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோரின் இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவுமில்லை. மாசு கொண்டதை கழுவிடுவீர். வரட்சி உற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருளுவீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணிய பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அழிவில்லா இன்பமும் அருள்வீரே. - ஆமென்!
அன்பான புனித கிறிஸ்டோபரே, மிரபெல்லா ஊழியராகிய நான், ஊழியத்திற்காக இன்று மேற்கொள்ளும் என்னுடைய எல்லா வழிப்பயணங்களிலும் எனக்கு பாதுகாப்பு தருவீராக. ஆபத்து அருகே இருக்கும் நேரங்களில் எனக்கு எச்சரிக்கை அடையாளம் தந்து, வழிபாதை தெளிவாகும் வரை பொறுமையாகக் காத்திருக்க அருள் புரியும். பயணத்தின் போது என் கண்கள் சோர்வடையும் நேரங்களில் என் அருகில் இருந்து வழிநடத்துவீராக! நீர் கிறிஸ்துவை அரவணைத்து சுமந்து சென்றது போல. நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு என்னையும் பாதுகாப்பாக சுமந்து செல்வீராக. - ஆமென்!
மிகவும் பேறு பெற்ற புனித யோசேப்பே!
எங்களுடைய துன்ப வேளையில் உமது புனித துணைவியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். இறையன்னையும் அமலோற்பவியுமான புனித கன்னிமரியாவிடம் உமக்குள்ள அன்பைக் குறித்தும், திவ்விய குழந்தை இயேசு நாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால், இயேசு கிறிஸ்து தமது விலைமதியா இரத்தத்தால் ஈட்டிய உரிமையைக் கருணையுடன் பார்க்கவும் எங்கள் துன்பத்திலே உமது பலமுள்ள உதவியால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம்.
ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்தி இயேசுவை வளர்த்த தந்தையே! இயேசு கிறிஸ்து தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும். ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தந்தையே! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே, எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக.
திவ்விய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படி நீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ, அவ்விதமே திருச்சபையையும் எல்லா ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக் கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணையாலும், நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து, பக்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கருணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.-ஆமென்.